Wednesday, 11 March 2015

Mathumitha

Writer: Ravindran. R

மதுமிதா!!😊
__________

உடம்புக்கு சுகமில்லை, இ்ன்னிக்கு லீவ் எடுத்துக்கறேன் என்று மேனேஜருக்கு வாட்சப் செய்தேன். உடனே பதில் வந்தது.

"ஏன் , என்னாச்சு?"
"நெஞ்சுக்கு கீழ கொஞ்சம் வலி, அஜீரணக் கோளாறுனு டாக்டர் சொல்லிருக்காரு"
"ஓகே, பழம் ஜூஸ் எல்லாம் சாப்டு. உடம்ப பாத்துக்கோ"
"சரி"
"எனக்குக்கூட உடம்பு சரியில்லை. நானும் இன்னிக்கு லீவு தான்"
"ஓகே! டேக் கேர்"

மேனேஜரும் லீவு, பேசாம ஆபிஸ் போய் தொலைச்சிருக்கலாம் என்று தோன்றியது.உடம்புக்கு எல்லாம் ஒன்றுமில்லை. லீவு போட்டதுக்கும் ஒரு அபத்தமான காரணம் இருக்கு.

ஆபீஸ்க்கு கெளம்பும்போது, தட்ல சாப்பாடு போட்டுட்டு டிவிய ஆன் பண்ணேண். ஆனந்த தாண்டவம் படம். அரை மணி நேரம் அண்ணாந்து பாத்து யோசிச்சுட்டு, இப்டி ஒரு படம் வந்துச்சானு கேக்கற அளவுக்கு ஓடின படம்.ஒரு சினிமாவுக்காக வீக்கென்ட்டை விரயமாக்காத கல்லூரி தினங்களின் வெள்ளிக்கிழமையொன்றில், நானும் ராமும் சுப்ரகீத்'ல பாத்துட்டு , படத்தின் இயக்குனரை வகைதொகை இல்லாமல் நான் வசைபாடியது வரை எனக்கு ஞாபகமிருக்கிறது. சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாவலை இவ்வளவு த்ராபையாக படமாக்கிருப்பதாலேயே, இன்னும் அந்த இயக்குநரை நான் மன்னித்த பாடில்லை.

முதற்காரணம்,  மதுமிதா! 
தமன்னாவை என்னால் மதுமிதாவாக சிறிதும் என்னால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மதுமிதாவை அழகி/பேரழகி என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது. பேரழகிகள் என்றால்  ஹெலன்,ஆப்ரோடைட் வகையறா. மதுவிற்கு ஒப்பீடே இல்லை . கனவில் தோன்றும் முகம் தெரியா அழகி அவள்; வானவில் ஓவியம், யாழிசை, நீர்வீழ்ச்சியின் சாரலென உவமைகளுடன் கவிதைகள் , கதைகள், கனவுகளில் மட்டுமே வசிப்பவள்.சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஒரு மதுமிதா உண்டு. பெண்ணிற்காக அவர்கள் வகுத்திருக்கும் இலக்கணத்திற்கு வெளியே அவளை வைத்திருப்பர். ஆகவே , மதுமிதாவை மனித உருவில் ஒரு பெண்ணாக , அதுவும் தமன்னாவாக என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

இரண்டாவதாக, இதன் திரைக்கதை,வசனம். சுஜாதாவின் எழுத்தை ரசிக்க, தமிழ் அறிந்திருத்தலே போதுமானது; அதை திரைவடிவமாக்க அது மட்டுமன்றி , ஒரு  சுஜாத்தாத்தனமும் வேண்டும். பீனைல் அசிடைல் ஆசிட், நற்றிணையில் வரும் கைக்கிளை பாடல், ஹாரல்ட் ராபின்ஸ் என ஒரே பத்தியில்  எல்லாரையும் பற்றிப் கோர்வையுடன் ரசிக்கும் படி எழுத சுஜாதாவால் மட்டுமே முடியும். யோசித்துப் பாரத்தால் மணிரத்னமோ சங்கரோ கூட சிறப்பான திரைவடிவம் தரமுடியுமா என்ற சந்தேகம் வருகிறது.இதில் அனுபவமே இல்லாத இயக்குனர் எடுத்தா இப்டிதான் இருக்கும் என்று சமாதானமாகிறேன்.


"சக்தி, நீ அழகா இருக்கனு நெனக்கல!" -சுஜாதாவின் வசனம். எவனும் இப்டி காதலை சொல்லிருக்க மாட்டான்; சொல்லப்போவதுமில்லை. ஆனாலும் எல்லோரும் ரசித்தோம்.மதுமிதாவும் அப்படித்தான். நிஜ உலகில் மதுமிதா சாத்தியமில்லை. ஆனால், மதுமிதாவை மறக்க முடியாது. இப்டி திடீர்னு மதுமிதா மதுமிதா என்று இதயம் வந்து காதில் சொல்லிக்கொண்டு இருந்ததால், மீண்டுமொருமுறை அவளை சந்திக்க , ஆபீஸ்க்கு லீவ் சொல்லிட்டு கெளம்பிட்டேன். 
படிச்சு முடிச்சுட்டு யோசிக்கும்போது தான் ஒரு Earned leave போச்சே'னு பீலிங்! தட் வட போச்சே மொமண்ட்! மதுமிதாக்காக தர்லாம், தப்பில்ல!